< Back
பெங்களூரு
மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அதிகாரிகள் வழங்க உத்தரவு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பெங்களூரு

மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அதிகாரிகள் வழங்க உத்தரவு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

தினத்தந்தி
|
16 July 2022 3:35 PM GMT

மாநிலத்தில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட செல்லும்போது மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பூஸ்டர் தடுப்பூசி

நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி, 75 நாட்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இதையொட்டி, பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் முகாமை காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் சுதாகர், முருகேஷ் நிரானி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வெள்ளப்பெருக்கு

மாநிலத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையால் பாதிப்புக்கு உள்ளான மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மழையால் அந்தந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வெள்ளப்பெருக்கின் அபாயத்தை உணர்ந்து, ஆற்றின் கரைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மக்கள் தங்குவதற்கு, தங்கும் மையங்களை திறக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளை கட்டுவதற்கு உடனடியாக ரூ.3½ லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பயிர்கள் சேதம் அடைந்தால், அதற்கு மத்திய அரசு வழங்கும் நிவாரணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிவாரணத்துடன், சேர்த்து மாநில அரசும் கூடுதலாக நிவாரணத்தை வழங்கும்.

நிவாரண உதவிகளை வழங்க உத்தரவு

மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று பார்வையிடும்படியும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படியும் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, மழை பாதித்த பகுதிகளை பார்வையிட செல்லும் அதிகாரிகள், அங்கு பாதிக்ககப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்க கூடாது. மக்களுக்கு தேவையான உதவிகள் உடனடியாக கிடைத்தால் மட்டுமே, இந்த சூழ்நிலையில் மக்களால் வாழ முடியும்.

மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களுக்கு மேலும் தொந்தரவு ஏற்படக்கூடாது. மக்கள் நிவாரணத்திற்காகவும், அரசின் உதவிகளை பெறுவதற்காகவும் தெருவுக்கு வரக்கூடாது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. சாலைகளை சீரமைக்க ஏற்கனவே ரூ.500 கோடியை அரசு ஒதுக்கி இருக்கிறது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் மழை நிவாரண பணிகளை மேற்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்