மாநிலங்களவை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) வாக்குகளை பிரிக்க முயற்சி-குமாரசாமி குற்றச்சாட்டு
|மாநிலங்களவை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) வாக்குகளை பிரிக்க பா.ஜனதா, காங்கிரஸ் முயற்சி செய்வதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரம்
கர்நாடகத்தில் பள்ளி பாடங்களை இந்த அரசு மாற்றி வருகிறது. பாடநூல் குழு மூலம் குழப்பங்களை ஏற்படுத்துவது தேசிய கல்வி கொள்கையின் ஒரு பாகம் ஆகும். பசவண்ணர், குவெம்புக்கு அவமானம் இழைக்கப்படுகிறது. கல்வித்துறையை நாசப்படுத்துகிறார்கள். பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் ஆதங்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மதம் குறித்து ஒன்றும் அறியாத குழந்தைகளிடம் விஷ விதைகளை விதைப்பது தான் புதிய கல்வி கொள்கையா?.
கர்நாடகத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜனதா தலைவர்கள் தங்களை வளர்த்து கொண்டனர். ஆனால் மாநிலம் வளரவில்லை. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். வருகிற ஜூலை மாதம் முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன். சித்தராமையாவுக்கு 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை காங்கிரஸ் வழங்கியது. ஆனால் காங்கிரஸ் கட்சியை சித்தராமையா அழித்துவிடுவார். இது வரும் நாட்களில் அக்கட்சி தலைவர்களுக்கும் தெரியவரும்.
வேலையின்மை அதிகரிப்பு
பா.ஜனதாவின் உண்மையான 'பி.டீம்' சித்தராமையா. அது இந்த மாநிலங்களவை தேர்தல் மூலம் தெரிந்துவிட்டது. பா.ஜனதாவோ அல்லது ஜனதா தளம் (எஸ்) கட்சியோ காங்கிரசை அழிக்க வேண்டியது இல்லை. சாமானிய மக்களின் கஷ்டங்களை தீர்க்கும் தாய் இதயம் கொண்ட அரசு தேவை. கொரோனா காலத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலைகளை இழந்தனர். இதனால் வேலையின்மை அதிகரித்துவிட்டது. மாநிலங்களவை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சி வாக்குகளை பிரிக்க பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயற்சி செய்கின்றன. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான். ஆனாலும் அவர்களும் எங்கள் கட்சி வேட்பாளருக்கு தான் வாக்களிப்பார்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.