< Back
பெங்களூரு
விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்:  போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு
பெங்களூரு

விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
14 Aug 2022 11:08 PM IST

விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உடுப்பி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மங்களூரு:

லத்தியால் தாக்கி...

உடுப்பி மாவட்டம் மல்பே பகுதியை சேர்ந்தவர் ஹிதாய்துல்லா (வயது 27). இவர் மீது கடந்த 2021-ம் ஆண்டு மல்பே போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மல்பே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலு, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஹரண கவுடா தலைமையில் 5 போலீசார் அவரை அழைத்துவர சென்றனர். அப்போது ஹிதாய்துல்லாவை போலீசார் ஷூ காலுடன் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், லத்தியால் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் ஹிதாய்துல்லா படுகாயம் அடைந்தனர். உடனே அவரை போலீசார் உடுப்பி மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே போலீசார் தன்னை தாக்கியதாக கூறி உடுப்பி கோர்ட்டில் ஹிதாய்துல்லா வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் போலீசார் தன்னை தாக்கியதாகவும், அதுகுறித்து வெளியே கூறினால் சிறையில் அடைத்து சித்ரவதை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறியிருந்தார். மேலும், அவர்கள் பொய் வழக்குகள் சுமத்தி தன்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டி உள்ளதாக கூறியுள்ளார்.

தீர்ப்பு வழங்கினார்

அந்த வழக்கின் விசாரணை உடுப்பி கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். இறுதியாக அவர் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது அவர் போலீசாருக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதால், மல்பே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலு, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஹரண கவுடா உள்பட 7 போலீசாா் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், போலீசார் மீது உரிய விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்