< Back
பெங்களூரு
இரவு நேரங்களில், கோலார் தங்கவயலுக்கு வராமல் செல்லும் வேலூர்  பஸ்கள்
பெங்களூரு

இரவு நேரங்களில், கோலார் தங்கவயலுக்கு வராமல் செல்லும் வேலூர் பஸ்கள்

தினத்தந்தி
|
17 Oct 2023 12:15 AM IST

தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் இருந்து கோலார் தங்கவயலுக்கு வர வேண்டிய பஸ்கள், இரவு நேரங்களில் வராமல் நேரடியாக கோலாருக்கு சென்றுவிடுவதாகவும், இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:

கோரிக்கை

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் இருந்து உரிகம்பேட்டை மார்க்கமாக சென்னைக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சாலை அமைய உள்ள பகுதிகளில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி கோலார் தங்கவயல் நகரசபை சார்பில் உரிகம்பேட்டை பகுதியில் சென்னை-பெங்களூரு பசுமை வழிச்சாலை அமைக்க இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அங்குள்ள கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எப்போது அந்த கட்டிடங்கள் அகற்றப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இரவு நேரங்களில்...

குறிப்பாக கோலார் தங்கவயலில் இருந்து அசோகா நகர், டோல்கேட், கிருஷ்ணாவரம், பேத்தமங்களா, ராபர்ட்சன்பேட்டை சர்க்கிள், உரிகம்பேட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக சென்னை-பெங்களூரு பசுமை வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் இந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பசுமை வழிச்சாலை அமைக்க இடையூறாக உள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் இருந்து கோலார் தங்கவயலுக்கு வர வேண்டிய பஸ்கள், இரவு நேரங்கள் வராமல் நேரடியாக கிருஷ்ணாவரம் வழியாக பங்காருபேட்டை மற்றும் கோலாருக்கு சென்றுவிடுகின்றன. இந்த பிரச்சினையையும் அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்