< Back
பெங்களூரு
இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை-முதல்-மந்திரி சித்தராமையா தகவல்
பெங்களூரு

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை-முதல்-மந்திரி சித்தராமையா தகவல்

தினத்தந்தி
|
9 Oct 2023 10:13 PM GMT

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

இஸ்ரேலில் சிக்கி தவிப்பு

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்கால மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் அங்கு குண்டு வெடிப்புகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே போர் உண்டாகி உள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேலில் போர் நடந்து வருவதால், அங்கு பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான கன்னடர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை

இஸ்ரேலில் உள்ள ஜெருசலம், டெல் அவீப், அர்ஜிலியம் மற்றும் ஹைபா பகுதிகளில் தான் கன்னடர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பகுதிகளில் போர் பதற்றம் இல்லாத காரணத்தால் கன்னடர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

என்றாலும், இஸ்ரேலில் போர் நடைபெற்று வருவதுடன், குண்டு மழை பொழிந்து வருவதால், கன்னடர்கள் பயத்தியிலும், பீதியிலும் இருந்து வருகிறார்கள். இதையடுத்து, இஸ்ரேலில் சிக்கி இருக்கும் கன்னடர்களை பாதுகாப்பாக மீட்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசு சார்பில் உதவி மையமும் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;- உதவி செய்ய அரசு தயார் இஸ்ரேல் நாட்டில் தற்போது போர் நடைபெற்று வருவதால், அங்கு சிக்கி இருக்கும் கன்னடர்களின் பாதுகாப்புக்காக அரசு சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் கன்னடர்களை இங்குள்ளவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலோ, அங்கிருக்கும் கன்னடர்கள் சிக்கி இருப்பதாக சந்தேகம் எழுந்தாலோ உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் கன்னடர்களை பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உதவி எண் அறிவிப்பு

இஸ்ரேலில் சிக்கி இருக்கும் கன்னடர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள உதவி மையத்தை 080-22340676 மற்றும் 080-22253707 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளும்படி முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்