கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலம்
|கிராம பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
கோலார் தங்கவயல்:
கிராம பஞ்சாயத்து ஊழியர்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா திப்பூரள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாதாபீர். இவர், திப்பூரள்ளி கிராம பஞ்சாயத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ெமஹர் தாஜ். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி வீட்டில் உடலில் தீ காயங்களுடன் எரிந்த நிலையில் தாதாபீர் இறந்து பிணமாக கிடந்தார். அதாவது மண் எண்ணெய் ஊற்றி தீவைத்து தாதாபீர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த திப்பூரள்ளி புறநகர் போலீசார் விரைந்து வந்து தாதாபீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
எரித்து கொலை
இதற்கிடையே தாதாபீரின் தங்கை ரேஷ்மா திப்பூரள்ளி புறநகர் போலீசில், எனது அண்ணன் தாதாபீர் சாவில் மனைவி மெஹர் தாஜ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தாதாபீரின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில், தாதாபீர் எரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், மெஹர் தாஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், மெஹர் தாஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தாதாபீரை கொன்றதை அவரது மனைவி மெஹர் தாஜ் ஒப்புக்கொண்டார்.
மேற்கொண்டு அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக...
அதாவது மெஹர் தாஜ்க்கும், கஞ்சகுண்டே கிராமத்தை சேர்ந்த தவுசீப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் 2 பேரும் தனியாக சந்தித்து பேசி உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்படி ஒருநாள் மனைவி மெஹர் தாஜ்ஜூம், தவுசீப்பும் உல்லாசமாக இருப்பதை தாதாபீர் பார்த்துள்ளார்.
இதையடுத்து அவர், 2 பேரையும் கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி கூறி வந்துள்ளார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக தாதாபீரை, அவரது மனைவி மெஹர் தாஜ் தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாதாபீரை, அவரது மனைவி மெஹர் தாஜ் கள்ளக்காதலன் தவுசீப்புடன் சேர்ந்து தீவைத்து எரித்து கொன்றது தெரியவந்தது.
கைது
இதையடுத்து மெஹர் தாஜை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தவுசீப்பையும் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.