மைசூரு தசரா விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் ஆலோசனை
|தசரா விழாவையொட்டி மைசூருவில் 2 கட்டங்களாக 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மைசூரு
ஆலோசனை கூட்டம்
மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. தசரா விழா தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்த நிலையில் தசரா விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மைசூருவில் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ், மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், தசரா விழாவையொட்டி மைசூரு நகரில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. அலோக் மோகன் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
இந்த கூட்டத்தில், தசரா விழா 10 நாட்கள் வரை நடக்க உள்ளதால் 2 கட்டங்களாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 ஆயிரம் போலீசாரும், 2-வது கட்டமாக 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக தசரா நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பாதுகாப்பு வழங்கவும், அங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போலீசார் ஈடுபடுத்தபடுவார்கள்.
2-வது கட்டமாக ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கும் தினத்தில் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால், சுமார் 2 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதனால் 2 கட்டங்களாக சேர்த்து 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்