ரூ.1,500 லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கைது-ஊழல் தடுப்பு படை அதிரடி
|பிடிவாரண்ட்டில் இருந்து விடுவிக்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய போலீஸ்காரரை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
மண்டியா:
பிடிவாரண்ட்
மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் போரேகவுடா. இவர் மீது மத்தூர் போலீசில் காசோலை மோசடி வழக்கு பதிவாகியிருந்தது. இந்த வழக்கில் கோர்ட்டு போரேகவுடாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த பிடிவாரண்ட்டில் இருந்து போரேகவுடா அடிக்கடி தப்பி வந்தார். இந்நிலையில் மத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீகாந்த் என்ற போலீஸ்காரர் போரேகவுடாவை கைது செய்ய சென்றார்.
அப்போது போரேகவுடா தன்னை பிடிவாரண்ட்டில் இருந்து விடுவிக்கும்படி போலீஸ்காரர் ஸ்ரீகாந்திடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ரூ.1,500 லஞ்சம் கொடுத்தால் பிடிவாரண்ட்டில் இருந்து விடுவிப்பதாக போரேகவுடாவிடம் போலீஸ்காரர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். முதலில் லஞ்சம் கொடுக்க போரேகவுடா ஒப்புக் கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத போரேகவுடா இது குறித்து மாவட்ட ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்தார்.
ரூ.1500 லஞ்சம்
புகாரின் பேரில் போரே கவுடாவிற்கு ஆலோசனைகள் வழங்கிய ஊழல் தடுப்பு படை போலீசார் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.1,500-ஐ கொடுத்து அதை போலீஸ்காரர் ஸ்ரீகாந்திடம் கொடுக்குமாறு கூறினர். அதேபோல் போரேகவுடா மண்டியா கோர்ட்டு அருகே ஸ்ரீகாந்த்தை சந்தித்து லஞ்சப்பணத்தை கொடுத்தார்.
அதை போலீஸ்காரர் ஸ்ரீகாந்தும் வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு படை போலீசார் ஸ்ரீகாந்த்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.