ரூ.17½ லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து தொழில் அதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட முயன்றவர் கைது
|ரூ.17½ லட்சத்துக்கு கள்ள நோட்டுக்களை கொடுத்து தொழில் அதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு-
ரூ.17½ லட்சத்துக்கு கள்ள நோட்டுக்களை கொடுத்து தொழில் அதிபரிடம் நூதன மோசடியில் ஈடுபட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கணக்கில் வராத பணம்
சித்ரதுர்கா(மாவட்டம்) டவுன் ஜெயலட்சுமி படாவனே பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் கவுடா பட்டீல். இவருக்கு மராட்டியத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழில் அதிபர் அறிமுகம் ஆனார். அப்போது தன்னிடம் கணக்கில் வராத பணம் பல லட்சம் ரூபாய் இருப்பதாகவும், அதனால் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அதற்கு பதிலாக ரூ.3 லட்சமாக தந்து விடுவதாகவும் மகேசிடம், சங்கர்கவுடா பட்டீல் கூறினார்.
அவர் கூறியதை நம்பிய மகேஷ், ரூ.6 லட்சத்தை கொடுத்தார். அதற்கு பதிலாக மகேசிடம், சங்கர்கவுடா பட்டீல் ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்தை திரும்ப கொடுத்தார். அந்த பணத்தை மகேஷ் பரிசோதித்த போது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
கைகலப்பு
இதையடுத்து அந்த பணத்தை எடுத்துச் செல்ல மகேஷ் மறுத்தார். இதனால் மகேசுக்கும், சங்கர்கவுடா பட்டீலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் இருவரும் கைகலப்பில் ஈடுபட முயன்றனர். அதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சித்ரதுர்கா டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சங்கர்கவுடா பட்டீல் மற்றும் மகேசை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
கைது
அப்போது சங்கர்கவுடா பட்டீல், மகேசிடம் கள்ளநோட்டுகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சங்கர் கவுடா பட்டீலை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.