< Back
பெங்களூரு
நில தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்ட விவசாயி
பெங்களூரு

நில தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்ட விவசாயி

தினத்தந்தி
|
30 Dec 2022 7:00 PM GMT

மடிகேரியில் நில தகராறில் வாலிபரை துப்பாக்கியால் சுட்ட விவசாயியை, வாலிபரின் உறவினர்கள் பிடித்து அடித்து, உதைத்தனர். இதனால் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குடகு:

நில தகராறு

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா பிளிகேரி கிராமத்தை சேர்ந்தவர் நிக்ஷல். விவசாயி. அதேப்பகுதியை சேர்ந்தவர் தீர்த்தா (வயது 35). அந்தப்பகுதியில் உள்ள 7 ஏக்கர் காபி தோட்டத்தை நிக்ஷல் வாங்கி உள்ளார். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்த காபி தோட்டத்தை தீர்த்தாவின் தந்தை கவனித்து வந்துள்ளார். இதனால் அந்த நிலத்தை வாங்க தீர்த்தா ஆவணங்களை தயார் செய்து வந்தார். இதற்கிடையே, நிக்ஷல் அந்த நிலத்தை வாங்கியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பல ஆண்டுகளாக தனது தந்தை தான் காபி தோட்டத்தை கவனித்து வந்ததாகவும், இதனால் தனக்கு தான் காபி தோட்டம் சொந்தம் என்றும் தீர்த்தா கூறி வந்துள்ளார். ஆனால் நிக்ஷலும் அந்த காபி தோட்டத்துக்கு சொந்தம் கொண்டாடி வந்துள்ளார்.

துப்பாக்கியால் சுட்டார்

இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவர்களுக்குள் நில பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, நிக்ஷல் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தீர்த்தாவை நோக்கி சுட்டுள்ளார். இதனை சுதாரித்து கொண்ட தீர்த்தா, உடனடியாக விலகி உள்ளார். ஆனாலும் அவரது கையில் குண்டு பாய்ந்தது. மேலும் தீர்த்தாவின் ஜீப்பும் சேதம் அடைந்தது.

இதில் தீர்த்தா பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீர்த்தாவின் உறவினர்கள், நிக்ஷலை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்துள்ளனர். இதில் தலை மற்றும் கையில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மடிகேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு மடிகேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு மடிகேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கஜேந்திர பிரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மடிகேரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

== =

மேலும் செய்திகள்