< Back
பெங்களூரு
சக்லேஷ்புராவில் காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
பெங்களூரு

சக்லேஷ்புராவில் காட்டு யானை தாக்கி விவசாயி சாவு

தினத்தந்தி
|
2 July 2022 10:56 PM IST

சக்லேஷ்புராவில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாசன்:

காட்டு யானைகள் அட்டகாசம்

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா கெலகலே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கெலகலே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணகவுடா (வயது 67) என்ற விவசாயி, நேற்று முன்தினம் தனது மகன் சுதீஷ் மற்றும் பேரக்குழந்தையுடன் தோட்டத்துக்கு சென்றார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி விளைநிலத்துக்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்ததும் கிருஷ்ணகவுடா மற்றும் அவரது மகன் சுதீஷ், பேரக்குழந்தை 3 பேரும் தப்பியோடினார்கள்.

விவசாயி சாவு

அப்போது அவர்களை காட்டு யானை பின்தொடர்ந்து விரட்டி சென்றது. அந்த சந்தர்ப்பத்தில் கிருஷ்ணகவுடா கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் காட்டு யானையிடம் சிக்கிக் கொண்டார். அவரை காட்டு யானை காலால் ஓங்கி மிதித்தது. இதில் கிருஷ்ண கவுடா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்து தோட்டத்தில் வேலைபார்த்தவர்கள் காட்டு யானையை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

போராட்டம்

அப்போது, கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ேமலும் அவர்கள் வனத்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது வனத்துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் உயிரிழந்த கிருஷ்ணகவுடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்