கலபுரகி கோர்ட்டில் 1,900 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்- சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
|சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக கலபுரகி கோர்ட்டில் 1,900 பக்க குற்றப்பத்திரிகையை சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.
பெங்களூரு:
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு
கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி கலபுரகி, பெங்களூரு சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலபுரகியில் உள்ள ஞானஜோதி பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தான் முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பள்ளியின் செயலாளரும், பா.ஜனதா பெண் பிரமுகருமான திவ்யா ஹாகரகி, கலபுரகி மாவட்டம் அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பட்டீல் உள்பட 60-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் பெரிய திருப்பமாக ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கலபுரகியில் கைது செய்யப்பட்டவர்கள் மேல் கோர்ட்டில் தாக்கல் செய்ய குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி கலபுரகி சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ரத்தோடு தலைமையில் நடந்து வந்தது.
34 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த நிலையில் கலபுரகி 3-வது கூடுதல் ஜே.எம்.எப்.சி. கோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் 1,900 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து உள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையில் முறைகேடு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்ற வீரேஷ், சேத்தன், பிரவீன்குமார், அருண்குமார், ஞானஜோதி பள்ளியின் ஆசிரியைகள் சாவித்ரி, சுமா, சித்தம்மா, அர்ச்சனா, சுனந்தா, பள்ளியின் தலைவர் ராஜேஷ் ஹாகரகி, போலீஸ்காரர்கள் அய்யாலி தேசாய், ருத்ரேகவுடா.
சரணபசப்பா, அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பட்டீல், திவ்யா ஹாகரகி, என்ஜினீயர் மஞ்சுநாத் மேலகுந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆனந்த், மல்லிகார்ஜூன், வைத்யநாத் ரேவூர் உள்பட 34 பேரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. மேலும் இவர்கள் தேர்வில் எந்த வழிகளில் முறைகேடு செய்தனர் என்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறியுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 34 பேரில் சுரேஷ் என்பவருக்கு மட்டும் கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. மற்ற 33 பேரும் சிறைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதன் மூலம் இந்த வழக்கு சூடுபிடித்து உள்ளது.