< Back
பெங்களூரு
அரசு பள்ளிகளில் புதிதாக 7,000 வகுப்பறைகள் அமைக்கப்படும்:  பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
பெங்களூரு

அரசு பள்ளிகளில் புதிதாக 7,000 வகுப்பறைகள் அமைக்கப்படும்: பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி

தினத்தந்தி
|
20 July 2022 10:46 PM IST

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக 7 ஆயிரம் வகுப்பறைகள் அமைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.

பெங்களூரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆசிரியர் பற்றாக்குறை

கர்நாடகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள்-மாணவிகள் விகிதம் 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உள்ளது. நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லை. ஆனால் சில மாவட்டங்களில் கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 1,812 அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளது. அத்தகைய பள்ளிகளில் ஒரு ஆசிரியர் பணியாற்றுகிறார்.

13 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 25-க்கும் குறைவாக உள்ளது. அங்கு போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை. அதனால் கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. இந்த ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய புதிதாக 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதிரி பள்ளி

புதிதாக 7 ஆயிரம் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு 2 ஜோடி சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 'ஷூ' கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்கவில்லை. தரமான ஷூக்கள், செருப்புகள், காலுறைகள் வழங்க சில தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பள்ளி குழந்தைகளை உரிய பாதுகாப்புடன் அழைத்து செல்ல பி.எம்.டி.சி. ஊழியர்களுக்கு உத்தரவிடப்படும். கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளில் ஒரு மாதிரி பள்ளி தொடங்கப்படும்.

இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

மேலும் செய்திகள்