கிராமத்திற்குள் புகுந்து 3 காட்டுயானைகள் அட்டகாசம்: வாழை தோட்டம் நாசம்
|ஹலகூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த 3 காட்டுயானைகள் வாழை தோட்டத்தை நாசப்படுத்திவிட்டு சென்றுள்ளது.
ஹலகூர்:
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே அமைந்துள்ளது காணாலு கிராமம். இந்த கிராமம் சிம்ஷா மற்றும் முத்தத்தி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறின. அவைகள் காணாலு கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. கிராமத்தில் உள்ள சாலைகளில் ஹாயாக உலா வந்த காட்டுயானைகள், பின்னர் கிராமத்தையொட்டி உள்ள மாதேஷ் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்திற்குள் புகுந்தன. அங்கு வாழை மரங்களை பிடுங்கி தின்றும், முறித்தும் நாசப்படுத்தின.
மேலும் அங்கிருந்த தென்னை மரம், தென்னங்கன்று உள்ளிட்டவைகளையும் நாசப்படுத்தின. இதேபோல் அப்பகுதியில் உள்ள மேலும் சில விவசாயிகளின் தோட்டங்களிலும் புகுந்து காட்டுயானைகள் விளைபயிர்களை நாசப்படுத்தின. பின்னர் அவைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதுபற்றி அறிந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுபற்றி அவர்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கிராமத்திற்குள் காட்டுயானைகள் புகும் வழிகளை கண்டறிந்து அங்கு சோலார் மின்வேலிகளை அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.