நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் - மந்திரி சிவானந்த பட்டீல் அறிவிப்பு
|கர்நாடகத்தில் தசரா பரிசாக நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மந்திரி சிவானந்த பட்டீல் அறிவித்தாா்.
விஜயாப்புரா:-
விஜயாப்புராவில் நேற்று ஜவுளித்துறை மந்திரி சிவானந்த பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் தசரா பரிசாக நெசவாளர்களுக்கு 10 எச்.பி. வரையிலான 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். இதற்காக ஜவுளித்துறை மந்திரியாக நான் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
250 யூனிட் இலவச மின்சாரம் நெசவாளர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்களை காங்கிரஸ் அரசு தற்போது அமல்படுத்தி உள்ளது. 10 எச்.பி. வரையிலான மின்சாரத்தை பயன்படுத்தும் நெசவாளர்கள் மாநிலத்தில் 35 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் பேர் உள்ளனர்.
அந்த நெசவாளர்களுக்கு தலா 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலமாக, அவர்கள் தங்களது தொழிலை விரிவுப்படுத்த உதவிகரமாக இருக்கும். இந்த இலவச மின்சாரத்திற்காக அரசுக்கு ரூ.120 கோடி முதல் ரூ.140 கோடி வரை கூடுதல் செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.