< Back
பெங்களூரு
ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் இஸ்ரேலில் சிக்கி தவிப்பு
பெங்களூரு

ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் இஸ்ரேலில் சிக்கி தவிப்பு

தினத்தந்தி
|
10 Oct 2023 3:38 AM IST

போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்க குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஹாசன்:-

இஸ்ரேலில் போர்

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ராக்கெட்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து இஸ்ரேல் போர் பிரகடனப்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. தொடர்ந்து பயங்கரவாதிகள், இஸ்ரேல் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் நர்சிங் படிப்புக்காக சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள் என 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

20 பேர் சிக்கி தவிப்பு

இந்த நிலையில் போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்த 20 பேர் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவை சேர்ந்த நவீன், ஜான்சன், தீனா டிசோசா, எலிசா பின்டோ, அந்தோணி டிசோசா, சக்லேஷ்புரா தாலுகா டிங்கா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணேகவுடா ஆகியோர் இஸ்ரேலில் வேலை மற்றும் படிப்பு விஷயமாக அங்கு வசித்து வருவதாகவும், போர் பதற்றம் காரணமாக அவர்கள் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள். இதில் சிலர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருவதும், ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் இஸ்ரேலில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போனில் பேச்சு

இவர்களில் கிருஷ்ணேகவுடா ஜெருசலேமின் தல்ஹிவியில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வரும் கிருஷ்ணேகவுடா, இஸ்ரேலில் நிலவும் போர் பதற்றத்தை தொடர்ந்து தனது சகோதரர் மகாதேவாவுக்கு நேற்று முன்தினம் போனில் பேசியுள்ளார்.

அப்போது அவர், இஸ்ரேலில் போர் நடைபெற்று வருகிறது. ராக்கெட் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எப்போதும் டமார்... டமார் என வெடிசத்தம் கேட்கிறது. நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஒரு வாரம் இஸ்ரேலில் நிலவும் நிலவரத்தை பார்த்துவிட்டு ஊருக்கு வர முடிவு செய்கிறேன் என்று கூறியதாக மகாதேவா நிருபர்களிடம் தெரிவித்தார்.

பத்திரமாக மீட்க கோரிக்கை

அதுபோல் நவீனும், தனது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் 20 பேரையும் பத்திரமாக மீட்க அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்