தசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
|தசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
பெங்களூரு:
தசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
உலக புகழ் பெற்ற தசரா விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) மைசூருவில் தொடங்குகிறது. இந்த விழா வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது. அத்துடன் தசரா விழா முடிவடையும். மைசூரு தசரா விழாவை காண கர்நாடகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினரும் வருகை தருகிறார்கள். தசரா பண்டிகை மைசூரு மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக தசரா விடுமுறையின்போது, கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) பெங்களூருவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
இதுகுறித்து அந்த கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மைசூரு தசரா விழாவையொட்டி பெங்களூருவில் இருந்து மைசூரு உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை இயக்கப்படும். இந்த பஸ்கள் மெஜஸ்டிக், கெங்கேரி, சேட்டிலைட் பஸ் நிலையம், சாந்திநகர் பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.
மைசூருவில் 350 பஸ்கள்
அதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் பெங்களூருவுக்கு வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா, சிருங்கேரி, ஹொரநாடு, சிவமொக்கா, மடிகேரி, மங்களூரு, தாவணகெரே, கோகர்ணா, கொல்லூர், உப்பள்ளி, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, கார்வார், பல்லாரி, ஒசப்பேட்டே, கலபுரகி, ராய்ச்சூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ஷீரடி, புனே, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கெங்கேரி சேட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் மைசூருவுக்கு இயக்கப்படும். அதே போல் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மைசூருவை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களை காண மைசூருவில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ். அணை, நஞ்சன்கூடு, மடிகேரி, மண்டியா, மலவள்ளி, எச்.டி.கோட்டை, சாம்ராஜ்நகர், உன்சூர், கே.ஆர்.நகர், குண்டலுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.
10 சதவீத தள்ளுபடி
பயணிகள் தங்களின் செல்போனில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மைசூரு பஸ் நிலையத்தில் ஒரு தகவல் மையம் திறக்கப்படுகிறது. பயணிகளுக்கு அங்கு பஸ்கள் குறித்து முழுமையான தகவல்கள் வழங்கப்படும். ஒரு டிக்கெட்டில் குறைந்தது 4 பேருக்கு முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். புறப்படுவதற்கு முன்பதிவு செய்யும்போது, திரும்பி வருவதற்கும் முன்பதிவு செய்தால் பயண கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். தேவைக்கு ஏற்ப அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.