போதைப்பொருள் விற்க முயன்ற 2 பேர் கைது
|ஆண்டர்சன்பேட்டை அருகே போதைப்பொருள் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோலார் தங்கவயல்
கோலார் தங்கவயலை அடுத்த ராபர்ட்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பாரண்டஹள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராபர்ட்சன்பேட்டை போலீசார் ஆந்திரா மற்றும் பாரண்டஹள்ளி எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் பாரண்டஹள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, 2 பேர் கைப்பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிய போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர்.
இதையடுத்து போலீசார் அவர்களின் கையில் இருந்த பையை வாங்கி பார்த்தனர். அப்போது அந்த கைப்பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் ஆந்திரா மாநிலம் குப்பை சேர்ந்த சந்திரசேகர் (வயது 34), பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையை சேர்ந்த சங்கர் லீமா (22) என்பது தெரியவந்தது. விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 580 கிராம் கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ராபர்ட்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.