< Back
பெங்களூரு
ஜனதாதளம்(எஸ்) கவுன்சிலர் கொலை வழக்கில் 2 பேர் கைது;கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
பெங்களூரு

ஜனதாதளம்(எஸ்) கவுன்சிலர் கொலை வழக்கில் 2 பேர் கைது;கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்

தினத்தந்தி
|
2 Jun 2022 10:03 PM IST

ஹாசனில் ஜனதாதளம்(எஸ்) கட்சி கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலமாகியுள்ளது.

ஹாசன்:

கவுன்சிலர் கொலை

ஹாசன் மாவட்டம் லட்சுமிபுரா லே-அவுட் 4-வது மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 40). ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர் ஹாசனில் 16-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கவுன்சிலர் பிரசாந்த் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடா நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்கள் தேடப்பட்டு வந்தனர்.

ரேவண்ணா போராட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொலையான பிரசாந்தின் மனைவி சவுமியா ஹாசன் டவுன் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் ஹாசன் டவுனை சேர்ந்த பூர்ணசந்திரா என்ற மீன்பிடி தொழிலாளி மற்றும் அவரது நண்பரான அருண் உள்பட 4 பேர் இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருந்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ.வுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் பிரசாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று போராட்டம் நடத்தினார். அப்போது பிரசாந்த்தின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று ரேவண்ணா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் புகார் மனுவை ஏற்க மறுத்த போலீசாரை பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று கூறினார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச கவுடா நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

உடல் ஒப்படைப்பு

இதையடுத்து ரேவண்ணா எம்.எல்.ஏ. உள்பட ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கவுன்சிலர் பிரசாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர். அதன் பின்னர் பிரசாந்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆஸ்பத்திரியில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பிரசாந்தின் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் ஜனதா தளம் (எஸ்) சேர்ந்தவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீட்டில் இருந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து சென்று தகனம் செய்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் கொலை வழக்கு தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ஹாசன் டவுனை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி பூர்ணசந்திரா, அருண் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, கொலையான பிரசாந்த்தும், பூர்ணசந்திராவும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் பிரசாந்திற்கும், பூர்ணசந்திராவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது பூர்ணசந்திராவிற்கு தெரியவந்ததும் கள்ளக்காதலை கண்டித்துள்ளார். ஆனால் 2 பேரும் கள்ளக்காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதன்காரணமாக ஆத்திரமடைந்த பூர்ணசந்திரா, கவுன்சிலர் பிரசாந்த்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு பிரசாந்த் தனியாக வருவதை அறிந்து பூர்ணசந்திரா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலையில் மேலும் சிலர் தலைமறைவாகவுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்