கஞ்சா போதையில் சுற்றிய 2 பேர் கைது
|அஜ்ஜாம்புரா டவுனில் கஞ்சா போதையில் சுற்றிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகாவில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. வௌிமாநிலங்களில் இருந்து மர்மநபர்கள் கஞ்சாவை கடத்தி வந்து அஜ்ஜாம்புரா பகுதியில் விற்பனை செய்து வருகிறார்கள்.
அவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியிலும், வாகனசோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கஞ்சா விற்பனை குறைந்தபாடில்லை.
இந்தநிலையில், அஜ்ஜாம்புரா டவுன் புக்காமதி ரோட்டில் போதையில் 2 பேர் சுற்றி கொண்டு இருந்தனர். மேலும் அவர்கள் அப்பகுதியில் நின்ற பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அஜ்ஜாம்புரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கு இருந்த 2 பேரும் தப்பியோடினர். அவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த சங்கரப்பா (வயது45), ரமேஷ் (32) என்பதும், கஞ்சா போதையில் அவர்கள் 2 பேரும் சுற்றியதும் தெரியவந்தது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறும் செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 2 பேரும், யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார்கள் என்பது குறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.