< Back
பெங்களூரு
பெண் உள்பட 2 பேர் கொலை
பெங்களூரு

பெண் உள்பட 2 பேர் கொலை

தினத்தந்தி
|
18 Oct 2023 3:21 AM IST

மைசூருவில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு:

மைசூருவில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண் கொலை

மைசூரு டவுன் கும்பாரகொப்பலு பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (வயது 43). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும், தையல் வேலையும் அவர் பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் புஷ்பா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மேட்டுஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் கொலையான புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், புஷ்பாவின் வீட்டுக்கு மஞ்சேஷ் என்பவர் அடிக்கடி வந்து சென்றதும், புஷ்பா கொலையான பிறகு அவர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவர் தான் புஷ்பாவை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

பிரசவ ஆஸ்பத்திரி அறையில்...

இதேபோல், மைசூருவில் உள்ள செலுவாம்பா பிரசவ ஆஸ்பத்திரியில் ஒரு வார்டு அறையில் ரமேஷ் என்ற கூலி தொழிலாளி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தேவராஜா போலீசார் விரைந்து வந்து, ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அவரை யாரோ மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து மேட்டுஹள்ளி, தேவராஜா போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து மஞ்சேஷ் மற்றும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்