பங்காருபேட்டை அருகே விளைநிலங்களில் புகுந்து 15 காட்டு யானைகள் அட்டகாசம்
|பங்காருபேட்டை அருகே விளைநிலங்களில் புகுந்து 15 காட்டு யானைகள் அட்டகாசம் ெசய்தன. அந்த காட்டு யானைகளை தமிழக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
15 யானைகள் அட்டகாசம்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா காமசமுத்திரம் அருகே தொப்பனஹள்ளி மற்றும் அதனைசுற்றியுள்ள கிராமங்கள் தமிழக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில், தமிழக வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக ஏராளமான காட்டு யானைகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் தமிழக வனப்பகுதியில் இருந்து 15 காட்டு யானைகள் வெளியேறி தொப்பனஹள்ளி மற்றும் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் புகுந்தன.
தமிழக வனப்பகுதிக்குள்...
அந்த காட்டு யானைகள் விளைநிலங்களில் புகுந்து தக்காளி, கத்திரிகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதுடன், தென்னை மரங்கள், வாழை மரங்களை சாய்த்து சேதப்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இந்த நிலையில் காட்டு யானைகளால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள், காட்டு யானைகளை தமிழக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.