ரூ.5 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு 10 பேர் கைது
|பெங்களூருவில் கடந்த 15 நாட்களில் மட்டும் ரூ.5 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்தவர் உள்பட 10 பேர் கைதாகி உள்ளனர்.
பெங்களூரு:-
10 பேர் கைது
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வெளிநாட்டினர் உள்பட பலரை கைது செய்து, போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும் போதைப்பொருட்கள் விற்பனை மட்டும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் பெங்களூருவில் சோழதேவனஹள்ளி, காடுகோடி, கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டு, பானசவாடி உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்கள் வந்தன. அந்த தகவல்கள் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி போதைப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறுகையில், பெங்களூருவில் காடுகோடி, கே.ஆர்.புரம், சோழதேவனஹள்ளி, எச்.எஸ்.ஆர். லே-அவுட், ஒயிட்பீல்டு, பரப்பன அக்ரஹாரா உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன.
9 செல்போன்கள்...
அதன்பேரில் போலீசார் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். கடந்த 15 நாட்களாக நடைபெற்ற சோதனையில் போதைப்பொருட்கள் விற்றதாக 10 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கைதானவர்களில் 8 பேர் நைஜிரீயா, செனகல் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி போதைப்பொருட்கள், ஒரு கார், 9 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 800 கிலோ எம்.டி.எம்.ஏ., 50 கிராம் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அடங்கும். மேலும் விசாரணையில் அவர்கள் வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து பெங்களூருவில் உள்ள ஐ.டி. ஊழியர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பரப்பன அக்ரஹாரா பகுதியில் நடைபெற்ற சோதனையில் மட்டும் ரூ.2½ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.