< Back
தேசிய செய்திகள்
ஒய்.எஸ்.ஆர். தொண்டர் படுகொலை; தெலுங்கு தேச கட்சிக்கு ஜெகன் மோகன் கடும் எச்சரிக்கை
தேசிய செய்திகள்

ஒய்.எஸ்.ஆர். தொண்டர் படுகொலை; தெலுங்கு தேச கட்சிக்கு ஜெகன் மோகன் கடும் எச்சரிக்கை

தினத்தந்தி
|
18 July 2024 7:24 AM GMT

ஆந்திர பிரதேசத்தின் வினுகொண்டா பகுதியில் நடந்த படுகொலையை தொடர்ந்து, பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பலநாடு,

ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் நேற்றிரவு ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவரை படுகொலை செய்து விட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான ஜெகன் மோகன் இன்று வெளியிட்ட செய்தியில், வினுகொண்டா பகுதியில் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களால் கொல்லப்பட்ட ரஷீத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் கீழ்த்தர செயல்களில் இந்த அரசு ஈடுபட்டு கொண்டிருக்கிறது.

நான் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக எச்சரிக்கிறேன். அதிகாரம் நிரந்தரமல்ல. வன்முறை வழிகளை அவர் கைவிடவேண்டும் என தெரிவித்து உள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கேடு நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரிடம் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

எனினும், பலநாடு எஸ்.பி. கஞ்சே ஸ்ரீனிவாஸ் இன்று கூறும்போது, வினுகொண்டா பகுதியில் நேற்றிரவு ரஷீத் என்பவரை ஜிலானி என்பவர் தாக்கியுள்ளார். இதில், ரஷீத் உயிரிழந்து விட்டார். அரசியல் நோக்கம் எதுவும் இதில் இல்லை. குற்றவாளியை பிடித்து விசாரித்து வருகிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும் என கூறியுள்ளார்.

இந்த படுகொலையை தொடர்ந்து, வினுகொண்டா பகுதியில் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்