வீட்டுக் காவல்.. வெளியேற விடாமல் தடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு ஆரத்தி எடுத்த ஒய்.எஸ்.ஷர்மிளா
|சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பயணத்திட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
தெலுங்கானா,
தெலுங்கானாவில் தலித் பந்து திட்டத்தின்கீழ் நிதியுதவி வழங்கப்படவில்லை எனக் கூறி, கஜ்வெல் தொகுதியில் தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவரது பயணத்திட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் கஜ்வெல் தொகுதிக்கு செல்வதற்காக அவர் இன்று காலையில் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். புறப்பட தயாரான அவரை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் வைத்தனர். அப்போது தன்னை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரிகளுக்கு ஒய்.எஸ்.ஷர்மிளா ஆரத்தி எடுத்தார். அப்போது, கடவுளே.. இவர்களுக்கு ஞானத்தையும் நீதியையும் கொடுங்கள். அதனால் அவர்கள் அரசாங்கத்தின் அமைப்பாக வேலை செய்ய வேண்டியதில்லை, என பிரார்த்தனை செய்தார்.
பின்னர் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முதல்-மந்திரி சந்திரசேகரராவ் அவரது தொகுதிக்குள் செல்லவிடாமல் தன்னை குறிவைப்பது வெட்கக்கேடான செயல் என ஷர்மிளா குற்றம் சாட்டினார்.
மேலும் பிரச்சனையை ஏற்படுத்துவதற்காக நான் அங்கு செல்லவில்லை, அமைதியான முறையில் போராட்டம் நடத்தி மக்களை சந்திக்க உள்ளேன் என்றும் ஷர்மிளா தெரிவித்தார்.