புற்றுநோய் குறித்த தவறான மருத்துவக் குறிப்பு காணொளிகளை நீக்க யூடியூப் முடிவு
|புற்றுநோயை பூண்டு குணப்படுத்தும், கதிரியக்க சிகிச்சைக்கு பதில் வைட்டமின் சி எடுக்கலாம் போன்ற காணொளிகளை நீக்க யூடியூப் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய மருத்துவத்துறை யூடியூப் தளத்தில் வெளியிடக்கூடிய மருத்துவம் சார்ந்த வீடியோக்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தி இருந்தது. மேலும், கொரோனா காலகட்டத்தில் பல தவறான சிகிச்சை முறைகள் யூடியூப் வழியாக பரவின. இது மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, யூடியூப் நிறுவனமும் மருத்துவம் சார்ந்த வீடியோக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த நிலையில், தற்போது யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், 'புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் என்று பல தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவத் தகவல் வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஒழுங்குபடுத்தப்பட உள்ளது.
'புற்று நோய்க்கான சிகிச்சை ஆபத்தானது, பயனற்றது என்று மக்களிடம் தவறான கருத்துகளை ஊக்குவிக்கும் ஊடகங்களும் நீக்கம் செய்யப்படும். இதற்கான பணி ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் தொடங்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, புற்றுநோயை பூண்டு மூலம் குணப்படுத்த முடியும், கதிரியக்க சிகிச்சைக்கு பதிலாக வைட்டமின் சி கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள் என்ற தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட, சிகிச்சை முறைகள் தொடர்பான வீடியோக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அவை விரைவில் முழுமையாக நீக்கம் செய்யப்படும்.
மேலும், மருத்துவத் துறை சார்ந்த பல்வேறு தவறான தகவல் பதிவுகளையும் நீக்குவதற்காக மருத்துவத் தகவல் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவிர, நோய்க்கான சிகிச்சை தொடர்பாக உலக சுகாதார தகவல் ஆணையத்தின் பரிந்துரைப்படி வீடியோக்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அவற்றில் முரண்பட்ட தகவல் கொண்ட வீடியோக்களை நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த தவறான தகவல் தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், மருத்துவத் துறை சார்ந்த விவாதங்கள், ஆக்கப்பூர்வமான பேச்சுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்' என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.