< Back
தேசிய செய்திகள்
கர்நாடக அரசு பஸ்சில் இளம்பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த போதை ஆசாமி
தேசிய செய்திகள்

கர்நாடக அரசு பஸ்சில் இளம்பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த போதை ஆசாமி

தினத்தந்தி
|
24 Feb 2023 3:46 AM IST

விஜயாப்புராவில் இருந்து மங்களூரு சென்ற கர்நாடக அரசு பஸ்சில் இளம்பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த போதை ஆசாமியை பாதி வழியில் டிரைவர் இறக்கிவிட்டார்.

பெங்களூரு:

விஜயாப்புராவில் இருந்து மங்களூரு சென்ற கர்நாடக அரசு பஸ்சில் இளம்பெண்ணின் இருக்கையில் சிறுநீர் கழித்த போதை ஆசாமியை பாதி வழியில் டிரைவர் இறக்கிவிட்டார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

கர்நாடக அரசு பஸ்

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா டவுனில் இருந்து தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு நேற்று காலை கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) சொந்தமான படுக்கை வசதி கொண்ட பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இதில் 3-ம் எண் கொண்ட கீழ் இருக்கையில் 20 வயது இளம்பெண் பயணம் செய்தார். அதே 3-ம் எண் மேல் இருக்கையில் 32 வயது வாலிபர் ஒருவர் பயணித்துள்ளார். அந்த பஸ் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே இரேசூர் கிராமத்தில் மதிய உணவுக்காக நிறுத்தப்பட்டது.

சிறுநீர் கழித்த போதை ஆசாமி

பயணிகள் அனைவரும் இறங்கி, ஓட்டலில் உணவு சாப்பிட சென்றனர். அப்போது 3-ம் எண் கொண்ட மேல் இருக்கையில் இருந்த வாலிபர் மட்டும் கீழே இறங்கவில்லை. அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சிறிது நேரத்தில் இளம்பெண் தனது இருக்கைக்கு திரும்பி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் மேல் இருக்கையில் போதை தலைக்கேறிய நிலையில் கீழே இறங்க முடியாமல் வாலிபர் திணறினார். சிறிது நேரத்தில் தனது இருக்கையில் இருந்தபடியே போதை வாலிபர் சிறுநீர் கழித்துள்ளார்.

பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார்

இது கீழ் இருக்கையிலும் பாய்ந்தோடியது. அதிர்ஷ்டவசமாக இளம்பெண் மீது சிறுநீர் படவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அந்த வாலிபரிடம் தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் போதையில் இருந்ததால் வாலிபர் சுய நினைவின்றி இருந்துள்ளார். சம்பவம் பற்றி இளம்பெண் பஸ் டிரைவரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு டிரைவர், மாற்று இருக்கை ஒதுக்கி கொடுத்ததாகவும், மேலும் அந்த வாலிபரை அதே இடத்தில் டிரைவர் இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் பற்றி இளம்பெண் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமானத்தில்...

ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த பெண் பயணி மீது, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ்சில் போதை வாலிபர் பெண் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்