நிலத்தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
|சீனிவாசப்புரா தாலுகாவில் நிலத்தகராறில் வாலிபர் ஒருவரை கத்தியால் குத்தி விவசாயி படுகொலை செய்தார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார்.
பெங்களூரு:
சீனிவாசப்புரா தாலுகாவில் நிலத்தகராறில் வாலிபர் ஒருவரை கத்தியால் குத்தி விவசாயி படுகொலை செய்தார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார்.
நிலப்பிரச்சினை
கோலார் மாவட்டம் சீனிவாசப்புரா தாலுகா நீலட்டூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரசாத்(வயது 33). இவரது குடும்பத்துக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதே கிராமத்தில் வசித்து வருபவர் கிரண். விவசாயியான இவருக்கும், பிரசாத்தின் குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதன்காரணமாக அவர்களுக்கு இடையே முன்விரோதமும் இருந்து வந்தது.
இந்த நிலையில் பிரசாத் நிலத்தில் இருக்கும் மாமரங்களில் இருந்து மாங்காய்கள் கிரணின் நிலங்களில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பிரச்சினையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கத்திக்குத்து
நேற்று காலையிலும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கிரண், பிரசாத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். மேலும் இரும்பு கம்பியால் பிரசாத்தை தாக்கினார். அதுமட்டுமின்றி கத்தியால் பிரசாத்தை குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த பிரசாத்தை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக கோலாரில் உள்ள ஜாலப்பா ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத கொலை சம்பவம் குறித்து சீனிவாசப்புரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கிரண், சீனிவாசப்புரா போலீசில் சரண் அடைந்தார்.
போலீஸ் குவிப்பு
அதையடுத்து போலீசார் வந்து பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவத்தால் நிட்டூர் கிராமத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதன்காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.