நிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரள மந்திரி வீணா ஜார்ஜ் விளக்கம்
|மனிதனின் உடலில் நிபா வைரஸ் நுழைந்தால் 21 நாட்கள் இருக்கும் என்று மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.
திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்து 24 வயது வாலிபர் உயிரிழந்துள்ளார். அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 26 பேர் மஞ்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு நிபா வைரஸ் பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த வாலிபர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்து வந்து உள்ளார். அங்கு அவருடன் தொடர்பில் இருந்த யாருக்காவது நோய் அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறியுமாறு அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாலிபருடன் தொடர்பில் இருந்த 26 பேரில் முதல் கட்டமாக 13 பேரின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்து உள்ளது. 2-வது கட்டமாக 13 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டு உள்ளது. மனிதனின் உடலில் நிபா வைரஸ் நுழைந்தால் 21 நாட்கள் இருக்கும். நோய் பாதித்து 9 நாட்கள் கடந்தால் மட்டுமே அறிகுறிகள் தென்படும். அந்த நாட்கள் முக்கிய காலகட்டமாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.