துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை; பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா?
|பெங்களூருவில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பெங்களூரு:
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பெங்களூரு கனகபுரா ரோடு ககலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் காரில் இருந்து திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரின் அருகே சென்று பார்த்த போது டிரைவர் இருக்கையில் ஒரு வாலிபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் உடனடியாக ககலிபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் பிரதீப் என்பதும், அவர் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் பிரதீப் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
பா.ஜனதா எம்.எல்.ஏ.
இந்த நிலையில் பிரதீப் தற்கொலை செய்துகொண்ட காரில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் பெங்களூருவை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் உள்பட 6 பேரின் பெயர்களை பிரதீப் எழுதி வைத்து இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி கொண்டனர். அதாவது, பப் வைப்பதற்காக பிரதீப் ரூ.2½ கோடியை 5 பேரிடம் கொடுத்துள்ளார். ஆனால் பப் வைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதீப்புக்கும், 5 பேருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இதனை தீர்க்க பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் பணம் கேட்டுள்ளார். அந்த பணத்தை கொடுத்தும் பிரச்சினை தீரவில்லை என தெரிகிறது. இதனால் தான் தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் தான் காரணம் என்றும் பிரதீப் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.