மங்களூருவில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது
|மங்களூருவில் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழகி இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு-
மங்களூருவில் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
'இன்ஸ்டாகிராம்'
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஒரு இளம்பெண் தனது பெற்ேறாருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த யமணூரா (வயது 22) என்பவர் பழகி உள்ளார். அவர் தான் மங்களூரு அருகே உள்ள வாமஞ்சூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக உள்ளதாக அறிமுகம் செய்துள்ளார். இதனை நம்பிய இளம்பெண் அவருடன் தொடர்ந்து இன்ஸ்டா கிராமில் மூலம் பேசி வந்துள்ளார். பின்பு அவா்கள் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்துள்ளனர்.
பலாத்காரம்
பின்னர் யமணூரா அந்த இளம்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என கூறி தண்ணீர் பாவி கடற்கரைக்கு அழைத்துள்ளார். அங்கு அவர்கள் சந்தித்து மொபைல் போனில் புகைப்படமும் எடுத்துள்ளனர். பின்பு யமணூரா அந்த புகைப்படத்தை அவரது நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார். மேலும் இளம்பெண்ணை பெங்களூரு நெலமங்களாவுக்கு அழைத்து சென்று அங்குள்ள விடுதியில் அறை எடுத்து யமணூரா தங்கினார். அங்கு யமணூரா அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது யமணூரா அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்தநிலையில் யமணூரா, அந்த இளம்பெண்ணிடம் உனது ஆபாசபடங்களை வெளியிடுவேன் என மிரட்டி, அதை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.1½ லட்சம் தருமாறு கேட்டுள்ளார்.
சிறையில் அடைப்பு
இதனால் பயந்து போன இளம்பெண் மங்களூரு பாண்டேஷ்வர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் யமணூராவை தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் யமணூராவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.