திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் ஸ்கூட்டரை எரித்த வாலிபர் கைது
|திருச்சூர் அருகே திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் ஸ்கூட்டரை எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்காடு:
திருச்சூர் அருகே கொரட்டி ஆற்றுப்பாடம் பகுதியில் வசிப்பவர் நிஜாமுதீன் (வயது 35). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். அவரது பக்கத்து வீட்டில் 36 வயதான பெண், கணவனை இழந்து மகனுடன் வசித்து வருகிறார். அந்த பெண் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து, குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே நிஜாமுதீன், கடந்த சில வாரங்களாக நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். உனக்கு சம்மதமா என அந்த பெண்ணிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் எனக்கு குழந்தை உள்ளது. எனவே, திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லை என்றும், திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கூறி உள்ளார். இருப்பினும், நிஜாமுதீன் அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம், திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்தார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நிஜாமுதீன் அந்த பெண் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றார். அங்கு மீண்டும் பெண்ணிடம் திருமணம் செய்யுமாறு கூறி தகராறில் ஈடுபட்டார். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, நிஜாமுதீன் பெட்ரோலை எடுத்து, பெண்ணின் ஸ்கூட்டரில் ஊற்றி தீ பற்ற வைத்தார். இதில் ஸ்கூட்டர் எரிந்து நாசமானது. பின்னர் அவர் வீட்டு ஜன்னல், கதவுகளை அடித்து சேதப்படுத்தி விட்டு சென்றார்.
இதுகுறித்து அந்த பெண் கொரட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்து, நிஜாமுதீனை கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.