உங்கள் மகன் அரசியல்வாதி ஆகவில்லை... ஆனால்... அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா
|ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கொல்கத்தா,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த 62 வயதான கிரேக் பார்கிளே 2020-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. 3-வது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இதையடுத்து ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கடந்த 27-ந்தேதி இதற்கான கடைசி நாளாகும். இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் ஜெய்ஷா ஐ.சி.சி.யின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 1-ந்தேதி அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐ.சி.சி.யின் தலைவராக பதவி ஏற்கும் குறைந்த வயது நிர்வாகி என்ற பெருமையை 35 வயதான ஜெய்ஷா பெற்றுள்ளார். அவருக்கு இந்திய வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "வாழ்த்துகள்! மத்திய உள்துறை மந்திரியே.. உங்கள் மகன் அரசியல்வாதி ஆகவில்லை. ஆனால், அதை விட மிக மிக முக்கியமான பதவியான ஐ.சி.சி. தலைவராகியுள்ளார். உங்கள் மகன் மிகவும் சக்தி வாய்ந்தவராகிவிட்டார் . அவரின் இந்த உயர்ந்த சாதனைக்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்... சபாஷ்" என்று தெரிவித்துள்ளார்.