< Back
தேசிய செய்திகள்
ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு  வீடு, வாகனம் -தனிநபர் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்பு
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு வீடு, வாகனம் -தனிநபர் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்பு

தினத்தந்தி
|
5 Aug 2022 5:18 PM IST

ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட்டின் வட்டி விகிதத்தை அதிகரித்து உள்ளதால் வீட்டுக்கடன், வாகன மற்றும் தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்கள் உயர்கின்றன.

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனான ரெப்போ ரேட்டின் வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் அதிகரிப்பதாக இன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன், வாகன மற்றும் தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்கள் உயர்கின்றன.

மேலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் வாங்கும் போது இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கியவர்களில் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் அதிகரிக்கும்.

கடந்த மே மாதம், 4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தப்படுதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 4.9 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு குறித்து சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரெப்போ வட்டி விகிதத்தில் 50 புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை பண வீக்கம் அதிகமாக உள்ளது. பண வீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியம், பொருளாதார வளர்ச்சியின் கீழ்நோக்கிய கணிப்பை திருத்தியுள்ளது. மேலும் மந்தநிலை அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய பொருளாதாரம், உயர் பண வீக்கத்தில் சிக்கி தவித்து வருகிறது. பல நாடுகளில் அன்னிய செலாவணி குறைந்து உள்ளது. பண வீக்கம் மிகவும் அதிகரித்து இருக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா வலுவான சூழலில் இருக்கிறது. போதிய அளவு அன்னிய செலாவணி, இருப்பு இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்தாலும் பிற நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக உயர்ந்து இருக்கிறது.

பிற நாடுகளில் இருக்கும் பண வீக்கம் இந்தியாவில் இல்லை. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அன்னிய நேரடி முதலீடு 13.6 பில்லியன் டாலராக மேம்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 11.6 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உலகளவில் 4-வது பெரியதாக உள்ளது. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதற்கான அறிகுறி உள்ளன. கிராமப்புற தேவைகள் கவலையான போக்கை காட்டுகிறது. அரசியல் அபாயங்கள் போன்ற உலகளவில் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளால் இந்திய பொருளாதாரம் சரிவை எதிர்கொள்கிறது. வங்கி அமைப்பில் உபரி பணப்புழக்கம் ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.6.7 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.8 லட்சம் கோடியாக குறைந்து உள்ளது. ஆகஸ்டு 4-ந்தேதி (நேற்று) வரை ரூபாய் மதிப்பு 4.7 சதவீதம் சரிந்து உள்ளது.

இதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் பண வீக்கத்தை காட்டிலும் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம். நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி தனது பொருளாதார வளர்ச்சியை 7.2 சதவீதமாக தக்க வைத்து கொண்டுள்ளது. சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்