ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ். படித்து வந்த ஆந்திர மாணவர் உயிரிழப்பு
|கிரிஷின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம் ராயசோட்டி நகரைச் சேர்ந்தவர் ரவுரி ஸ்ரீனிவாஸ். இவரது மகன் ரவுரி கிரிஷ் என்பவர், ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வந்த நிலையில் அங்கு திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக இறந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அன்னமயா மாவட்ட கலெக்டர் பி.எஸ். கிரிஷா கூறியதாவது:-
ஜார்ஜியாவின் திபிலிசி நகரில் உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படித்து வந்த கிரிஷ் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக அவரது தந்தை ரவுரி ஸ்ரீனிவாஸ் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தார். மேலும், கிரிஷின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். கிரிஷ் உடலை கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.