சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
|சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
சிவமொக்கா;
சிறுமி பலாத்காரம்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் சிறுமி ஒருவள் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இதேபோல் அதேப்பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ் என்ற நவீன்(வயது 18). இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி சிறுமி வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த லிங்கராஜ், சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து சாக்லெட் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அங்கு வைத்து லிங்கராஜ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளாள். இந்த சத்தம் கேட்டு பெற்றோர், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது லிங்கராஜ், சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து லிங்கராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பத்ராவதி புறநகர் போலீசார் லிங்கராஜை கைது செய்தனர். மேலும் கைதான அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
20 ஆண்டுகள் சிறைதண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. நேற்று வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பலாத்காரம் செய்தது நிரூபணமானதால் லிங்கராஜிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.