தாயின் சமாதி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
|தாயின் சமாதி அருகே வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது அண்ணன் புகார் அளித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:
தாயின் சமாதி அருகே வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது அண்ணன் புகார் அளித்துள்ளார்.
தனியார் நிறுவன ஊழியர்
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகா தாடிகோல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்(வயது 22). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பிரவீன் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக பிரவீன் சொந்த ஊருக்கு வந்தார்.
ஆனால் திடீரென பிரவீன் மாயமானார். வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று பிரவீன் தாடிகோல் கிராமம் அருகே சுடுகாட்டில், தனது தாயின் சமாதி அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி அறிந்த போலீசார் விரைந்து வந்து பிரவீனின் உடலை கைப்பற்றினர். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரவீனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பிரவீனின் அண்ணன் முனிசாமிரெட்டி சீனிவாசப்பூர் புறநகர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் பிரவீனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.