கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை
|பெங்களூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட இளம்பெண், கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். அவர், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாதேவபுரா:
பெங்களூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட இளம்பெண், கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். அவர், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலபுரகியை சேர்ந்த இளம்பெண்
பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மகேஷ்வரிநகரில் 21 வயது இளம்பெண் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் கலபுரகி மாவட்டம் ஆகும். பெங்களூருவில் தன்னுடைய அக்காளுடன் வாடகை வீட்டில் அந்த இளம்பெண் வசித்து வந்தார். அந்த இளம்பெண்ணும், அவரது அக்காளும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் 2 பேருக்கும் விடுமுறை ஆகும்.
இதனால் காலையில் இருந்து இரவு வரை 2 பேரும் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இரவு 8 மணியளவில் அந்த இளம்பெண் மட்டும் வெளியே சென்று விட்டு வருவதாக அக்காளிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நள்ளிரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த இளம்பெண்ணின் அக்காள் தனது சகோதரியை அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
படுகொலை
இதையடுத்து, இளம்பெண்ணை காணவில்லை என்று அவரது அக்காள் மகாதேவபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணி தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு கூடாரம் முன்பாக அந்த இளம்பெண் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அப்பகுதி மக்களும்,இளம்பெண்ணின் அக்காளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது. இளம்பெண்ணின் கழுத்தை மர்மநபர்கள் கயிற்றால் இறுக்கி படுகொலை செய்திருப்பதும், பின்னர் அவரது உடலை அங்கு வந்து வீசிவிட்டு சென்றிருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
கற்பழிக்கப்பட்டாரா?
ஆனால் அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணத்திற்காக இளம்பெண் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. மேலும் நேற்று முன்தினம் இரவு இளம்பெண், யாருடன் வெளியே சென்றார், அவருக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இளம்பெண் கற்பழிக்கப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதுகுறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் அவர் கற்பழிக்கப்பட்டாரா? என்பது பற்றிய தகவல் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.