இளம்பெண்ணுக்கு குளிர்பானம் கொடுத்து காரில் கூட்டு பலாத்காரம்; சக கலைஞர்கள் வெறிச்செயல்
|ஜார்க்கண்டில், ஸ்பெயின் நாட்டு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட அடுத்த நாள், மற்றொரு பலாத்கார சம்பவம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேதினிநகர்,
ஜார்க்கண்டில் பலமு மாவட்டத்தில் விஷ்ரம்பூர் பகுதியில் மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, சத்தீஷ்காரை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார்.
ஆனால், திட்டமிட்டபடி அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால், உசைனாபாத் பகுதியில் உள்ள மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 சக கலைஞர்களுடன் கார் ஒன்றில் சென்றார். அவர்கள் 3 பேரும் பலமு நகரை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில், உசைனாபாத் செல்லும் வழியில் இளம்பெண்ணுக்கு சக கலைஞர்கள் 3 பேரும் முன்பே திட்டமிட்டபடி குடிப்பதற்கு, மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதனை குடித்தவுடன் அவர் மயங்கி விட்டார். இதன்பின்னர் சக கலைஞர்கள் 3 பேரும் காரில் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுயநினைவின்றி இருந்த அவரை சாலையோரம் போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தலைநகர் ராஞ்சியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் விஷ்ரம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சனிக்கிழமை இரவில் நடந்துள்ளது.
இதுபற்றி போலீசாருக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஷ்ரம்பூர் காவல் நிலையத்தின் துணை மண்டல காவல் அதிகாரி ராகேஷ் சிங் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளி கிழமை இரவில், கூடாரம் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் மற்றும் அவருடைய கணவரை 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று சூழ்ந்து கொண்டது. இதில், கணவரை அடித்து, தாக்கி விட்டு அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு சென்றது.
இந்த சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் இருந்து சுற்றுலா வந்த அவர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை இரவில் மற்றொரு பலாத்கார சம்பவம் நடந்து உள்ளது. ஜார்க்கண்டில் அடுத்தடுத்த தினங்களில் 2 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.