'பிரச்சினையில் சிக்கிக்கொள்வாய்...'- நடிகர் தர்ஷனை முன்பே எச்சரித்த ஜோதிடர்
|ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகர் தர்ஷனின் தோழியான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி இருந்தார். இதனால் அவரை நடிகர் தர்ஷன், தனது கூட்டாளிகள் மூலம் கடத்தி வந்து படுகொலை செய்தார். இதுதொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் தர்ஷன் பிரச்சினையில் சிக்க இருப்பதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே ஜோதிடர் ஒருவர் கணித்து எச்சரித்து இருந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது நடிகர் தர்ஷனுக்கு நேரம் சரியில்லை எனவும், மவுனம் காக்கவும், கோபத்தை குறைக்கவும் அந்த ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஜோதிடர் எச்சரித்தும் அதை நடிகர் தர்ஷன் மீறியதால் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருவதாக சொல்லப்படுகிறது.
சிறையில் நடிகர் தர்ஷனை திரைப்பட இயக்குனர்கள் ஜோகி பிரேம், தருண் சுதீர் உள்ளிட்ட கன்னட திரை உலகினர் சந்திக்க சென்றனர். ஆனால் நடிகர் தர்ஷன் தற்போது யாரையும் சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டார். இதையடுத்து தர்ஷனை சந்திக்காமல் அவர்கள் திரும்பினர்.