கொச்சையாக பேசியுள்ளீர்கள் - சி.வி.சண்முகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
|முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சி.வி.சண்முகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
12 மணிநேர வேலை செய்ய அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதா, வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்களில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இது தொடர்பாக அவருக்கெதிராக தமிழக அரசு 4 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தது. விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மத்திய அரசை கண்டு தமிழக அரசு பயப்படுவதாகவும், கஞ்சா முதல்-அமைச்சர் என்று விமர்சித்ததற்காகவும் தொடரப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.
அதே நேரத்தில், தொழிலாளர்கள் சட்டம் குறித்தும், மோசடி அரசு என்று பேசியதற்காக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.
தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட வேண்டும் என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு எப்படி கொச்சையாக பேச முடிகிறது என்று சி.வி.சண்முகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
மேலும், இவ்வளவு மோசமான ஒரு பேச்சுக்காக சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.