நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள் - பதக்கம் வென்றவர்களிடம் பிரதமர் மோடி பெருமிதம்
|நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள், 140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்களை நான் வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்தியா முதல் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது;
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்பட்டதில் நான் பெருமையடைகிறேன்.வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வழங்கியுள்ளனர். இந்திய மகள்களின் தகுதியை இது காட்டுகிறது.
நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். 140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்களை நான் வரவேற்கிறேன். உங்களின் உழைப்பாலும், முயற்சியாலும், சாதனையாலும் இந்தியா முழுவதும் கொண்டாட்ட மனநிலை ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டில் ஏராளமான திறமைசாளிகள் உள்ளனர். ஆனால், சில தடைகளால் அவர்களின் திறமை பதக்கங்களாக மாறாமல் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் போதையில்லா இந்தியா என்ற செய்தியைப் பரப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டார்.