< Back
தேசிய செய்திகள்
நீங்கள் யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது:  சுப்ரீம் கோர்ட்டை சாடிய மத்திய சட்ட மந்திரி
தேசிய செய்திகள்

நீங்கள் யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது: சுப்ரீம் கோர்ட்டை சாடிய மத்திய சட்ட மந்திரி

தினத்தந்தி
|
5 Feb 2023 1:07 PM IST

பொதுமக்களே தலைவர்கள், அரசியல் சாசனமே வழிகாட்டி என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ சுப்ரீம் கோர்ட்டை கடுமையாக சாடி பேசியுள்ளார்.



புதுடெல்லி,


சுப்ரீம் கோர்ட்டில், ஐகோர்ட்டு நீதிபதிகள் 5 பேரை பதவி உயர்வு கொடுத்து நீதிபதிகளாக்கும்படி கொலீஜியம் பரிந்துரைத்து இருந்தது. இதில், 5 நீதிபதிகளின் பெயர்களை பரிசீலனை செய்து, ஐகோர்ட்டு நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளாக பணியமர்த்துவதற்கு அரசு இன்று அனுமதி அளித்து உள்ளது.

எனினும், இந்த விசயத்தில் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல என சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடும் வகையில் நேற்று தெரிவித்து இருந்தது. இதனை குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் இன்று மத்திய மந்திரி ரிஜிஜூ பேசினார்.

அவர் பேசும்போது, சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது போன்ற செய்திகளை பார்த்தேன் என கூறினார். இதனை கேட்டு பார்வையாளர்கள் வரிசையில் இருந்த சிலர் சிரித்தனர்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ஆனால் நாட்டில் தலைவர்கள் என்பவர் இந்த நாட்டின் மக்கள். நாம் அனைவரும் சேவகர்கள். தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது பொதுமக்களே. நாட்டில் வழிகாட்டி என ஒன்று இருக்கிறது என்றால், அரசியல் சாசனமே நமது வழிகாட்டியாகும்.

நாடு எப்படி நடக்க வேண்டும் என பொதுமக்கள் எப்படி விரும்புகிறார்களோ? அதன்படி நடக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. நீங்கள் யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது என கூறினார். அவரது பேச்சுக்கு பலத்த கைத்தட்டல் எழுந்தது.

இந்த சிறந்த தேசத்திற்கு, பணியாளர்களாக சேவை செய்வதற்கு ஒரு சேவை கிடைத்து இருக்கிறது என நாம் நம்மை பார்த்தோம் என்றால், அதுவே நல்லது என ரிஜிஜூ கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்