< Back
தேசிய செய்திகள்
நீங்கள் ஒரு பெண்.. உங்களுக்கு எதுவும் தெரியாது- சட்டசபையில் கொந்தளித்த நிதிஷ்குமார்
தேசிய செய்திகள்

'நீங்கள் ஒரு பெண்.. உங்களுக்கு எதுவும் தெரியாது'- சட்டசபையில் கொந்தளித்த நிதிஷ்குமார்

தினத்தந்தி
|
25 July 2024 12:21 AM IST

உங்களுக்கு எதுவும் தெரியாது என்று எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ.விடம் நிதிஷ்குமார் கூறியதால் பீகார் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாட்னா,

பீகார் அரசின் திருத்தப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதாதளம் கோரிக்கை விடுத்து வருகிறது.

இது தொடர்பாக நேற்று சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கை தொடர்பாகவும், முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதில் ரேகாதேவி உள்பட பெண் எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். பெண் எம்.எல்.ஏ.க்களும் தனக்கு எதிராக கோஷமிட்டதைப்பார்த்த நிதிஷ்குமார் கோபத்தின் உச்சிக்கே சென்றார். இருக்கையில் இருந்து எழுந்து ரேகா தேவியை பார்த்து கை விரல்களை நீட்டி ஆவேசமாக பேசினார்.

'நீங்கள் ஒரு பெண். நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைத்தது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஒரு பெண், இன்னும் உங்களுக்கு எதுவும் தெரியாது' என சத்தமாக பேசினார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிதிஷ்குமாரின் இந்த செயலுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்