ஓடும் ரெயிலில் யோகா ஆசிரியைக்கு பாலியல் தொல்லை
|ஓடும் ரெயிலில் யோகா ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை பாந்திரா ரெயில் நிலையத்துக்கு யோகா ஆசிரியை ஒருவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சென்றார். கோரேகாவ் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் இருவரும் ஏறினர்.
மின்சார ரெயில் புறப்பட்டு சென்றபோது வாலிபர் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யோகா ஆசிரியையின் உடலில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அந்த வாலிபரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி தனது ஆண் நண்பரிடம் தெரிவித்தார். சக பயணிகள் அந்த வாலிபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த விஸ்வகர்மா(வயது28) என்பது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விஸ்வகர்மாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.