'யோகாவுக்கு புத்துயிர் அளித்து பிரபலப்படுத்தினார்' - பிரதமர் மோடிக்கு, சசிதரூர் பாராட்டு
|யோகாவுக்கு புத்துயிர் அளித்து பிரபலப்படுத்தினார் என்று பிரதமர் மோடிக்கு, சசிதரூர் பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி,
சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், யோகாவை உலக அளவில் பிரபலப்படுத்தியதற்காக நாட்டின் முதல் பிரதமர் நேருவை காங்கிரஸ் கட்சி நினைவு கூர்ந்திருந்தது. அத்துடன் நேரு யோகா செய்யும் புகைப்படம் ஒன்றையும் டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது.
அதில், 'சர்வதேச ேயாகா தினத்தில், யோகாவை பிரபலப்படுத்தியதுடன், தேசியக்கொள்கையின் ஒரு பகுதியாகவும் மாற்றிய நேருவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உடல் மற்றும் மன நலனுக்கு உதவும் யோகாவை நம் வாழ்வில் இணைக்க நடவடிக்கை எடுப்போம்' என்று கூறியிருந்தது.
இதற்கு பதிலளித்திருந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், பிரதமர் மோடியின் பங்களிப்பையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர், 'உண்ைம. அதேநேரம் ஐ.நா. மூலம் யோகாவை சர்வதேசமயமாக்கியதற்காக, நமது அரசு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சகம் உள்பட யோகாவுக்கு புத்துயிர் அளித்து பிரபலப்படுத்திய அனைவரையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.