பராமரிப்பு பணிகளுக்காக ஒரே நாளில் 140 ரெயில்கள் ரத்து - பயணிகள் அவதி
|பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரெயில்கள் முழுவதுமாகவும் 35 ரெயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன.
புதுடெல்லி:
நாடு முழுவதும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரெயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. அதைப்போல சிக்னல் கோளாறுகளும் ஏற்பட்டு இருந்தன. இவற்றை ரெயில்வே நிர்வாகம் நேற்று சரி செய்தது.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரெயில்கள் முழுவதுமாக ரத்துசெய்யப்பட்டன. 35 ரெயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன. தர்பங்கா எக்ஸ்பிரஸ், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ், சோலாப்பூர் எக்ஸ்பிரஸ், ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ், நெல்லூர்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை போன்ற ரெயில்கள் முற்றிலுமாக ரத்துசெய்யப்பட்டன.
சென்னை-விஜயவாடா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் பகுதியாக ரத்துசெய்யப்பட்டன. மேலும், பல ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இதைப்போல கணினி பயன்பாட்டிலும் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்காரணமாக இ-டிக்கெட் புக்கிங் சேவையும் பாதிக்கப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் சரியாக செயல்படவில்லை.
ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளால் நேற்று நிச்சயித்த பயணத்தை மேற்கொள்ள முடியாமல் பயணிகள், பெரிதும் அவதிப்பட்டனர். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் ரத்துசெய்ய முடியாமலும் சிரமப்பட்டனர்.