மஞ்சள் காய்ச்சல்: தடுப்பூசி கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
|மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல் ஆகும்.
புதுடெல்லி,
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இத்தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாள்கள் கழித்தே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும், அதேபோல, மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவர். இதற்காக விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், உடல் வலி, மஞ்சள் காமாலை ஆகிய அறிகுறிகள் ஏற்படும். மஞ்சள் காய்ச்சல் விவரங்கள், தடுப்பூசி பற்றிய தகவல்களை htps://ihpoe.mohfw.gov.in/index.php என தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்களில் ஏடிஸ் ஜேசிப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்ச்சல் உண்டாகிறது. இந்த காய்ச்சலை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சில கடுமையான பிரச்சினைகளைக் கூட ஏற்படுத்திவிடக் கூடும். மஞ்சள் காய்ச்சலுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. கொரோனா, டெங்கு போன்ற வைரஸ் தொற்று சிகிச்சையைப் போன்றுதான் இந்த மஞ்சள் காய்ச்சலுக்கும் அதன் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மஞ்சள் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தடுப்பூசியும் போடப்படுகிறது.