கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
|கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து அங்கு போக்குவரத்து பாதித்தது.
நவம்பர் 2-ம் தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் பாலக்காடு போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இன்று முதல் நவம்பர் 2 வரை மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.