< Back
தேசிய செய்திகள்
டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்: சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்
தேசிய செய்திகள்

டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்: சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
26 July 2024 12:20 PM IST

டெல்லியில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என்றும், அன்று வரை டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக டெல்லியின் சாந்தி பாதை, நவுரோஜி நகர், பிகாஜி காமா பிளேஸ், மோதி பாக் ரிங் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடக்கு, தெற்கு மற்றும் மத்திய டெல்லி பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்துவருகிறது. டெல்லியின் முக்கியமான பகுதிகள் மழைநீர் தேங்கியதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட பல கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், அலுவலகத்துக்கு செல்வபவர்கள் உட்பட பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மழை நீரோடு பாதாள சாக்கடைகளின் கழிவுநீரும் கலந்து வெளியேறிவருவதால், ஜக்கிரா அண்டர்பாஸ், ஆசாத்பூர் சுரங்கப்பாதை, மின்டோ பாலம், அசோக் விஹார் மற்றும் ஜஹாங்கிர்புரி ஆகியவை மோசமாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, டெல்லியில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என்றும், அன்று வரை டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் பலத்த காற்றுடன் தீவிரமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்